search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் திருட்டு"

    உவரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    உவரி அருகே உள்ள மேற்கு தோப்புவிளை கிராமத்தை சேர்ந்தவர் பிரைடுவர்க்கீஸ் (வயது 25). இவர் விலைஉயர்ந்த ‘ரேஸ்’ மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

    சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரைடு வர்க்கீஸ் உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி கருவலூரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களை கோவிலின் அருகே நிறுத்திவிட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து 2 பேரும் அவினாசி போலீசில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் அவினாசி டி.எஸ்.பி. பரமசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையில் போலீசார் நேற்று காலை 5 மணி அளவில் கருவலூர் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி தப்பிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர் .

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையம் சங்கர் நகரை சேர்ந்த ஆசிக் (வயது 21), ரைஸ்தீன் (20) என்பதும் கருவலூர் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 4 மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளை திருடியதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    வளசரவாக்கத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    நெற்குன்றத்தை சேர்ந்தவர் நாகநாதன் இவர் கடந்த 6-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வளசரவாக்கம் ஜானகி நகரில் உள்ள கடை முன்பு நிறுத்திவிட்டு காலையில் எடுக்க வந்தபோது காணவில்லை.

    அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதிகாலையில் வந்த 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பதிவாகி இருந்தது. அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வந்தார். இந்த நிலையில் நேற்று ஆழ்வார்திருநகர் தனியார் வணிக வளாகம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் கெருகம்பாக்கம் லீலாவதி 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த விமல் ராஜ் அதே பகுதியைச் சேர்ந்த 18-வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பது தெரிய வந்தது. விமல்ராஜ் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும் சிறுவன் முதலாமாண்டும் படித்து வருகிறார்கள். இருவரும் நாகநாதன் பைக்கை திருடி சென்றதை ஒப்புக் கொண்டனர்.

    வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு கடைகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் விலை உயர்ந்த சொகுசு மோட்டார் சைக்கிளை மட்டும் குறிவைத்து திருடி வந்ததும் தெரியவந்தது. உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே வேளச்சேரி காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு உள்ளது.

    நீலாங்கரையில் 4 மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை, சோழ மண்டல தேவி நகர், முதல் தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவரின் மோட்டார்சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் அக்கரை சோதனைச் சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அவருடைய பெயர் நந்த குமார் என்பதும் நீலாங்கரையைச் சேர்ந்த இவன் பல இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து அவனிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். கட்டிட தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த 2-ந் தேதி முத்துச்செல்வன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து தட்டார்மடம் போலீசில் அவர் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தட்டார்மடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஒரு சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் உடன்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் புத்தன்தருவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி செந்தில்வேல் என்பவருடன் சேர்ந்து விவசாயி முத்துச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. 

    இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில்வேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    போடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மூலம் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாயனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தேவர் காலனி, கிருஷ்ணாநகரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். நகர் பகுதியில் வரும் மோட்டார் சைக்கிள்களை நோட்டமிட்டனர்.

    அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி சோதனை போட்டனர். சோதனையில் மோட்டார் சைக்கிளில் 150 மதுப்பாட்டில்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக போடி சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா, சின்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    செங்குன்றம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    செங்குன்றம்:

    செங்குன்றம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் செங்குன்றத்தை அடுத்த கிரான்ட் லைன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒரு வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவர் பெயர் லிங்கேஸ்வரன் என்பதும் வியாசர்பாடி சாஸ்திரிநகரை சேர்ந்த இவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    வளசரவாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் பறித்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    வளசரவாக்கம் ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

    இதையடுத்து வளசர வாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவர்கள் சிலர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் காரம்பாக்கம் சந்திப்பில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் 17 வயதுக்குட்பட்ட வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதும் தனியாக செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்படி கூட்டாளிகளான 16 மற்றும் 14 வயதுடைய மதுரவாயல், நெற்குன்றம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்களையும் பிடித்தனர்.

    கைதான 4 பேரிடம் இருந்தும் 40 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுந்தர். இவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற உறவினரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது தண்டையார் பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ஷேக்முகைதீன் (30) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    வளசரவாக்கத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளை திருடி அதன் மூலம் செல்போன் பறித்து வந்த 2 பேரை கைது செய்தனர்.

    போரூர்:

    சென்னை வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் சம்பத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று இரவு வளசர வாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் போலீசார் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை மடக்கினர். போலீசாரை கண்டதும் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

    உடனடியாக மற்றொரு பைக்கில் துரத்திச் சென்ற போலீசார் அவர்களை பிடித்தனர் அவர்கள் மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (வயது 19) மற்றும் 10-ம் வகுப்பு பள்ளி மாணவரான 15 வயது சிறுவன் என்பதும் பைக்கிற்கு உரிய ஆவணம் இல்லை என்பதும் தெரியவந்தது.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங் களில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்கை திருடி அதன் மூலம் தொடர் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் திருடிய பைக்கை வேறு ஏதாவது ஒரு பகுதியில் கொண்டு விட்டுவிட்டு செல்வதும் தெரியவந்தது.

    உடனடியாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7பைக் மற்றும் 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    வேலூரில் சாலையோரம் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை மர்மகும்பல் திருடி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (வயது 33). இவர் நேதாஜி மார்க்கெட் எதிரில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்று விட்டனர். பலவன்சாத்து கிராமத்தை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் பிரேம்தாஸ் (வயது 28). வேலூர் வந்த இவர் சி.எம்.சி. அவுட்கேட் அருகே காட்பாடி சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வேலூர் வடக்கு குற்றபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களை குறிவைத்து திருடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை மணியக்கார தெருவை சேர்ந்த பாலு (55). இவரது பைக்கை வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்தார். அதனை மர்ம கும்பல் திருடி சென்றுவிட்டனர்.

    அம்மூர் கிருஷ்ணாநகரை சேர்ந்த பாஸ்கரன் (52) வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இதுபற்றி ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆற்காடு தாலுகா மய்யூர் கிராமத்தை சேர்ந்த பசுபதி (41) என்பவர் பரதராமியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனி அருகே பைக் நிறுத்திவிட்டு சென்றார்.அதனை திருடி சென்றுவிட்டனர். திமிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியந்தோப்பு அருகே 8 மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், டிக்காஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்ற ஒருவரை நிற்க சொன்னார். உடனே அவர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினார்.

    அவரை பிடித்து விசாரித்த போது புளியந்தோப்பு அம்பேத்கார் நகரை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பதும் மோட்டார் சைக்கிள் திருடி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து 8 மோட்டர் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    ×